Friday, January 14, 2011

விதைத்தல் மற்றும் நடவு செய்தல்

நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

Source: www.indg.in

No comments:

Post a Comment